வடகொரியாவில் தலைவிரித்தாடும் முடி உதிர்தல் பிரச்னை, அந்நாட்டு அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கைகள் எப்போதும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றன. ஏவுகணை சோதனைகளில் மட்டுமே சர்வதேச செய்திகளில் வடகொரியாவின் பெயர் இடம் பெற்று வருகிறது.
உலகமே கொரோனா பெருந்தொற்று காலத்தில் பதறிக்கொண்டிருந்த போது, எல்லைகளை மூடி முடங்கி இருந்து வந்தது. இப்படி, மர்மம், சர்ச்சை, விசித்திரம் என வித்தியாசமான நாடான வடகொரியாவில், பொதுமக்களுக்கு தலைமுடி வேகமாக உதிர்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியாவில் பயன்படுத்தப்படும் சோப் மற்றும் ஷாம்புகளில் உள்ள அதிகப்படியான ரசாயனமே இதற்கு பிரதான காரணம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதே சமயம், வடகொரியாவில் உள்ள அனைத்து ஆண்களும், 10 ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். அப்போது, தொடர்ந்து அணிந்திருக்கும் தொப்பியும், முடி வேகமாக உதிர்வதற்கு காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறது.
முடி உதிர்தலுக்கான சிகிச்சை மேற்கொள்ள போதிய பண வசதி இல்லாததால், அந்நாட்டு மக்கள் செய்வதறியாது தலையில் கை வைத்து உட்கார்ந்து உள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், வடகொரியா மட்டுமின்றி தென்கொரியாவிலும் முடி உதிர்தல் பிரச்னை தீவிரமாக உள்ளது. அந்நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பரப்புரையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முடி உதிர்தலுக்கான சிகிச்சை இலவசமாக வழங்கப்படும் என்று எதிர்கட்சிகள் வாக்குறுதி அளித்தது நினைவு கூறத்தக்கது.