தமிழ்நாடு
தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை ‛என் மண்.. என் மக்கள்’ எனும் பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்தும் பணியில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த பாதயாத்திரை தென்மாவட்டம், கொங்கு மாவட்டங்களில் நிறைவு பெற்றுள்ளது. பல இடங்களில் அண்ணாமலைக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர்.
தற்போது டெல்டா மாவட்டங்களில் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா சர்ச்சில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பிரார்த்தனை செய்தார். சர்ச்சில் இருந்த போதகர்கள் அண்ணாமலையை வரவேற்று ஆசி வழங்கினர்.
அதன்பிறகு அண்ணாமலை அவர்களுடன் பேசி கொண்டிருந்தார். வேளாங்கண்ணி தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த போட்டோக்களை அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛இன்றைய தினம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்துக்குச் சென்று, மாதாவைத் தரிசித்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தேவாலயத் தந்தை அவர்களிடம் உரையாடும்போது, உத்தரகாண்ட் மாநிலச் சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட, வேளாங்கண்ணி தேவாலயத்தில், சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தியிருப்பதை அறிந்து மனம் நெகிழ்ந்தேன். பல நூற்றாண்டுகள் தொன்மையான வேளாங்கண்ணி ஆலயம், மத வேறுபாடுகள் இல்லாது அனைவரும் வழிபடும் தேவாலயமாக இருப்பது தமிழகத்துக்கே பெருமை. தமிழக மக்கள் அனைவரின் நலனுக்காகவும், மாதாவிடம் பிரார்த்தித்துக் கொண்டோம்” என்றார்.