தமிழ்நாடு
மிக் ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மூன்று நாட்களாகியும் வெள்ளம் வடியவில்லை. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை முதல் அவர்கள் மீனவர்கள் உதவியுடன் படகுகளில் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் படகுகளில் மீட்க மீனவர்கள் பணம் கேட்கப்படுவதாக கூறப்படுகிறதே என செய்தியாளர் ஒருவர் அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் கேள்வி எழுப்ப, அந்த மாதிரியெல்லாம் இல்லை, எங்கேயாவது அப்படி இருந்தால் நிரூபிக்கலாம் என்றும் நடவடிக்கை எடுக்கிறோம் எனவும் உறுதியளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், சேவை செய்பவர்களை தயவு செய்து கொச்சைப்படுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு வேண்டுகோளை ஏற்று மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு அழைக்காமலேயே 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் தன்னார்வமாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் கூறினார். மீட்புப் பணியில் ஈடுபடுபவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி அவர்களை கொச்சைப்படுத்தவோ, விமர்சிக்கவோ கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
முகத்துவாரத்தில் நீரை கடல் உள் வாங்கத் தொடங்கியிருப்பதால் தண்ணீர் விரைவில் வடிந்துவிடும் எனக் கூறிய அவர் தனது வீட்டை ஒட்டி நேற்றிரவு 4 அடி தண்ணீர் தேங்கியிருந்த நிலையில் இன்று காலை வடிந்து 1 அடியாக குறைந்துவிட்டது எனக் கூறியுள்ளார். இதனிடையே மழை நீருடன், கழிவு நீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தொற்று நோய்கள் உருவாகும் ஆபத்து உள்ளதால் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.