வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையில் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்திவிட்டுச் சென்றுள்ளது. புயல் காரணமாக டிசம்பர் 4ஆம் திகதி காலை முதல் இரவு வரை இடைவிடாது பெய்த கன மழையின் காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியது. இதனால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால், சென்னை முழுவதும் இருளில் மூழ்கியது. அத்துடன், இணைய சேவையும் தடைபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. 5ஆம் தேதி முதல் மழை நின்று வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்ட நிலையில் முதலமைச்சர், அமைச்சர்கள் முதல் அதிகாரிகள், கடை மட்ட ஊழியர்கள் வரை மீட்புப் பணிகளில் இடைவிடாது ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான சேதங்களை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும், மத்தியக் குழு சென்னை வந்து சேதங்களை பார்வையிட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் மிக்ஜாம் புயல் வெள்ள மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை விவரங்களை பிரதமரிடம் முதலமைச்சர் விரிவாக எடுத்து வைத்துள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் வழங்க திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு சென்றபோது இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளது.
உரையாடலின் போது தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வரிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார் என்றும் டி.ஆர்.பாலு தெரிவித்தார். முதல்வரிடம் பிரதமர் பேசியுள்ள நிலையில் விரைவில் மத்திய குழு தமிழகம் வரும் எனவும், அதன் ஆய்வுக்குப் பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.