உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவின் வடக்கு பகுதியில் ஆர்க்டிக், அதாவது வட துருவம் அருகே அமைந்துள்ள பகுதி தான் சைபீரியா. இந்த பகுதியில் தான் இப்போது சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் குறைந்துள்ளது. ரஷ்யாவின் இந்த சைபீரியா பகுதியில் நேற்றைய தினம் வெப்பம் மைனஸ் 58 டிகிரி செல்சியஸாக (மைனஸ் 72 டிகிரி பாரன்ஹீட்) குறைந்தது.
இங்கே அமைந்துள்ள யாகுட்ஸ்க் நகரம் உலகின் குளிரான நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரத்தில் தான் இப்போது வெப்பம் கடுமையாகச் சரிந்துள்ளது. இந்த நகரம் முழுக்க உறைபனி மேகங்கள் மற்றும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது, இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அது பார்க்கும் அனைவருக்கும் அச்சமூட்டுவதாக இருக்கிறது.
இது தொடர்பாக அங்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், “இந்த வானிலையை அனுபவிப்பதற்காகவே நான் இங்கு யாகுட்ஸ்க் வந்தேன். டிசம்பரில் எப்போதும் இந்தப் பகுதியில் குளிர் குறையும். ஆனால் இந்தளவுக்கு வெப்பம் குறையும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. இந்த உறையும் வெப்பத்தால் எனது உடையே கடினமாகிவிட்டது” என்றார்.
நேற்று இரவு சைபீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சகா குடியரசின் பல பகுதிகளில் மைனஸ் 55 செல்சியஸ் கீழ் சென்றது. குறிப்பாக அங்குள்ள ஓமியாகோன் என்ற பகுதியில் மைனஸ் 58 செல்சியஸுக்கு சென்றது. ஈரப்பதம் மற்றும் காற்றின் காரணமாக இது மைனஸ் 63 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. யாகுட்ஸ்கில் உள்ள சந்தையில், சாதாரணமாக மீனை வெளியே வைத்தாலே அது உறைந்துவிடுகிறது. பொதுவாக மீனை ஐஸ் பெட்டிகளில் வைத்தே விற்பார்கள். ஆனால், இந்த குளிரில் சும்மாவே அது உறைந்துவிடுவதாகவும் ஐஸ் பெட்டிகள் தேவையில்லை என்றும் மீன் விற்பனை செய்வோர் தெரிவித்தனர்.