தமிழ்நாடு
மிக்ஜாம் புயல் கரையை கடந்து சென்றுவிட்டாலும், புயலின் தாக்கம் இன்னமும் சென்னையை விட்டு அகலவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில், சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து பக்கமும் மழைநீர் சூழ்ந்துள்ளது. புயல் சென்னையை கடந்து செல்லும்போது இருந்ததைவிட தற்போது குறைந்திருந்தாலும், இன்னமும் முழுதாக தண்ணீர் வடிந்துவிடவில்லை.
இதனால் வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதேபோல் சென்னையில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். ஹெலிகாப்டரில் அவர் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு முதல்வர் ஸ்டாலினை அவர் சந்திக்க உள்ளார்.