மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழகத்துக்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு – அமித் ஷா அறிவிப்பு…!!
இந்தியா: தமிழ்நாடு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார். அப்போது, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்வுக்குப் பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது புயல் வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார். அதன்பின்னர் மத்திய அமைச்சருக்கு புயல் பாதிப்பு குறித்தும், நிவாரணப் பணிகள் குறித்தும் வீடியோ காட்சி மூலம் விளக்கமளிக்கப்பட்டது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னை மீண்டு வர தேவையான அனைத்து நிவாரண உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டை தாக்கிய மிக்ஜாம் தீவிர புயலால் கடும் பாதிப்பு ஏற்படுள்ளததாக குறிப்பிட்டுள்ளார். புயல் நிவாரணப் பணிகளுக்கு உதவும் விதமாக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு இரண்டாம் கட்டமாக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதல்கட்டமாக 450 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், சென்னையில் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக 561 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற வெள்ள தணிப்பு திட்டத்தை செயல்படுத்த பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். சென்னை வடிநிலப் பகுதி திட்டத்திற்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி பங்களிப்பாக வழங்கும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.