தமிழ்நாடு
16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் டிசம்பர் 17ஆம் தேதி திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சேலத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை பிரமாண்டமாக நடத்த தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துவருகிறார்.
மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றவிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தி.மு.க-வின் இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, இரு சக்கர வாகனப் பிரசார பேரணி கடந்த 15ஆம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. இந்தப் பேரணி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லவிருக்கிறது. மொத்தம் 13 நாள்களில், 8,647 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
அதிமுகவின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் தான் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டை சேலத்தில் நடத்துவதன் மூலம் திமுகவை கொங்கு பகுதியிலும் பலப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது.
அதோடு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முக்கிய பரப்புரை களமாகவும் இந்த மாநாட்டை பயன்படுத்த திமுக முற்படுகிறது. ஒரு மாத ஊதியத்தை புயல் நிவாரண நிதியாக வழங்கிய முதல்வர் ஸ்டாலின்! எம்எல்ஏ, எம்பிக்களுக்கும் கோரிக்கை இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளதால் அதற்கான நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சூழ்நிலையில் திமுக மாநாடு நடத்துவது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் சேலத்தில் 17ஆம் தேதி நடைபெற இருந்த மாநாடு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 17ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 24ஆம் தேதியன்று திமுக இளைஞரணி மாநாடு நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.