வங்கக்கடலில் கடந்த 27ஆம் திகதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. புயலுக்கு மிக்ஜாம் என்று பெயர் வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 100 மீட்டர் தொலைவில் புயலானது நிலைகொண்டிருந்தது.
இதன் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. கடுமையான மழையின் காரணமாக நகரத்தில் தண்ணீரும் தேங்கியது. தி.நகர் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, வடபழனி முருகன் கோயில் குளம்,அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னை முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும் தீவிரமாக மீட்பு பணிகளில் இறங்கினர். வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் பல உதவிகளை செய்தனர். தற்போது பெரும்பாலான இடங்களில் நீர் வடிந்துவிட்டதால் சென்னை மக்கள் படிப்படியாக தங்களது இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய திரையுலகிலிருந்தும் உதவிக்கரங்கள் நீண்டுள்ளன. அந்தவகையில் சூர்யா, கார்த்தி, ஹரிஷ் கல்யாண், கலக்கப்போவது யாரு பாலா உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர். விஜய் மக்கள் இயக்கத்தினரும் களத்தில் இறங்கி மும்முரமாக நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் நிதியுதவி அளித்திருக்கிறார். அதன்படி மிக்ஜாமால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து அளித்தார். அவரது இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துவருகின்றனர்.