தமிழ்நாடு
சென்னையில் புயல் வெள்ள பாதிப்புகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக அரசுக்கு ஆதரவாக ஒரு பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் ஒரு பச்சோந்தி போன்றவர், அவரை அரசியல்வாதியாக நான் மதிக்கவில்லை, அவர் கட்சியில் அவரை தவிர வேறு யாரும் இல்லை எனக் காட்டமாகக் கூறினார்.
இதையடுத்து தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஒடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் நம்மவரை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்து. பொதுமக்களைப் பற்றிக் கவலைப்படாமல், கூவத்தூரில் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை மக்களுக்காகச் செலவழித்துக் கொண்டிருக்கும் தலைவரைப் பற்றி விமர்சிக்கத் தகுதி இல்லை என எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யம் பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், கமல்ஹாசன் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜூ கூறியதாவது…
கமல்ஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடி தெரியாது. தேர்தலில் ஒரு சீட்டுக்காக திமுகவிற்கு லாலி பாடுகிறார். திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார். அவர் படத்தை மக்கள் இனி எந்த மாவட்டத்திலும் பார்க்கமாட்டார்கள். துன்பத்தில் உள்ள மக்களுக்கு ஆதரவாக அவர் பேசவில்லை. தொடர்ந்து பதுங்கு குழியில் இருந்த கமல்ஹாசன் தான் தற்போது வெளியே வந்துள்ளார். அவர் அரசியல் நாகரிகமற்றவர். மதுரையில் கட்சி தொடங்கி வீராப்பாக பேசிய கமல்ஹாசனின் வீராப்பு இப்போது எங்கே சென்றது? கமல்ஹாசன் திமுகவிற்கு ஆதரவாக பேசினால் இனிமேல் அவர் ரசிகர்களும், விநியோகிஸ்தர்களும் அவரைவிட்டு விலகி அவர் நிழல் கூட அவருடன் இருக்காது எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.