வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையினர் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 14ஆம் திகதி ஜெமினிட்ஸ் விண்கல் மழையின் உச்சக்கட்டத்தை இலங்கையர்கள் பார்வையிட முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
இதனை எதிர்வரும் 14ஆம் திகதி இரவு 9.00 மணிக்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு வானில் அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் சிரேஷ்ட வானியலாளர் இந்திக்க மெதகங்கொட தெரிவித்துள்ளார்.
ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு இந்த ஆண்டின் மிகவும் சிறந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
ஆங்கிலத்தில் ஜெமினிட்ஸ் என சொல்லப்படும் இந்த எரிகல் மழை உச்சத்தை அடையும் சமயத்தில் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான எரிகற்களை நாம் காண முடியும்.
விண்கற்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் நுழைந்தவுடன் எரிந்து சாம்பலாவதால் ஏற்படும் நெருப்புச் சிதறல் நட்சத்திரம் புஸ்வாணம் போல சீறிப் பாய்வதாக காட்சியளிக்கும்.
மேகமூட்டமில்லாமல் வானம் தெளிவாக இருக்கும் இடங்களில் தொலைநோக்கிகள் இல்லாமல் வெறும் கண்ணுக்கே இந்த எரிகல் மழை தென்படும்.