கடவுளின் கோபத்தில் இருந்து இஸ்ரேல் தப்பமுடியாது – நாடாளுமன்றத்தில் பேசிய துருக்கி எம்பிக்கு மாரடைப்பு…!!
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே மோதல் என்பது நீண்டகாலமாக நடந்து வந்தது. இந்நிலையில் தான் தற்போது போராக மாறி 2வது மாதமாக நீடித்து வருகிறது. காசாவில் நுழைந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் காசாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. மேலும் இஸ்ரேல் போர் நடவடிக்கையை கைவிட வேண்டும். இஸ்ரேல் மற்றும் காசா இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என இந்தியா உள்பட பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் அதற்கு செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் தான் காசா மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து துருக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது துருக்கியில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் இஸ்ரேல் -ஹமாஸ் போர் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சாடெத் கட்சியின் எம்பி ஹசன் பிட்மெஸ் எனும் எம்பி பேசினார்.
53 வயது நிரம்பிய இவர் இஸ்ரேலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது காசாவில் ஹமாசுக்கு எதிரான போரை இஸ்ரேல் கைவிட வேண்டும்.எங்களை அழித்துவிட்டால் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம் என நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில் இது நடந்தால் மனசாட்சி உங்களை உறுத்தும். அந்த வேதனையில் இருந்து உங்களால் தப்பவே முடியாது. ஒருவேளை நீங்கள் தப்பினாலும் கூட அல்லாவின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என பேசினார்.
இப்படி அவர் பேசி முடித்த நிலையில் திடீரென்று மயங்கி விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிபிஆர் உள்பட பல முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கோகலி துணை ஹசன் பிட்மெஸ் நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த வீடியோ என்பது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.