தமிழ்நாடு
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவதற்கு சில ஆண்டுகள் முன்பு வரை அதாவது அவர் ஆக்டிவாக இருந்தக் காலக்கட்டத்தில், தினமும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்து விடுவார். மாவட்டங்களில் இருந்து வரும் உட்கட்சி பஞ்சாயத்துக்களை அரை மணி நேரத்தில் தீர்த்து வைத்துவிடுவார். அவரை போய் பாரு, இவரை போய் பாரு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. நேரடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை அழைத்து பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்துவிடுவார் கருணாநிதி.
இப்போது தேமுதிக பொதுச்செயலாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பிரேமலதா விஜயகாந்த், கருணாநிதி பாணியை கையிலெடுத்து தினமும் கட்சி அலுவலகத்துக்கு செல்லவுள்ளார்.
அதேபோல் மாவட்டங்களில் இருந்து யார் வேண்டுமானாலும் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கூட தன்னை கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசலாம் என்ற உறுதியையும் நேற்றைய தினம் அளித்துள்ளார். இதன் மூலம் எப்போதும் கட்சி அலுவலகத்தில் கோலோச்சும் தேமுதிக தலைமைக்கழக நிர்வாகிகள் சிலருக்கு செக் வைத்துள்ளார்.
தினமும் கட்சி அலுவலகத்துக்கு செல்லும் பிரேமாதா விஜயகாந்தின் முடிவு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. அதேபோல் தை மாதத்திலேயே கூட்டணி விவகாரத்தில் முடிவெடுத்து தேர்தல் பணிகளை இந்த முறை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்ற திட்டத்தை கையில் வைத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.
இதனிடையே விஜயகாந்துக்கு கிடைத்த வரவேற்பும், மரியாதையும் பிரேமலதாவுக்கு கிடைக்காது என மூத்த பத்திரிகையாளர் பிரியன் உள்ளிட்டோர் விமர்சித்துள்ள நிலையில், அந்த விமர்சனங்களை உடைத்தெறிந்து தனது ஆளுமை திறனை நிரூபிக்க வேண்டிய கடமையும், சவாலும் பிரேமலதாவுக்கு உள்ளது.