தமிழ்நாடு
வங்கக் கடலில் உருவாகி ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்த மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்திவிட்டுச் சென்றது. டிசம்பர் 4ஆம் திகதி முழுவதும் விடாமல் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில் சென்னையில் மழைநீர் வடிகால் வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், அதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.4,000 கோடி என்ன ஆனது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும் வலியுறுத்தின.
இதனிடையே தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆலோசகர் குணால் வித்யார்த்தி தலைமையில் சென்னை வந்த மத்திய குழுவினர், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் தமிழக அரசை மத்திய குழு பாராட்டியது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது,
இதற்கு பதிலளித்த அவர் கூறுகையில், “வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு உடனே வந்திருக்க வேண்டும். அதனை வலியுறுத்த தமிழக அரசு மறந்துவிட்டது. இப்போது வந்த மத்திய குழு புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ஆக ஓஹோவென என தமிழக அரசை பாராட்டியுள்ளனர். இதன் மூலம் பாஜகவுடன் திமுக ரகசிய உறவு வைத்திருப்பதாகவே எல்லோரும் சொல்கிறார்கள்.
மக்களை சந்தித்தால் தான் கள நிலவரம் என்னவென்று தெரியும். ஆனால், மத்திய குழுவை மக்கள் சந்திக்கவிடாமல் காவல் துறை மூலம் தடுத்துவிட்டு புகைப்படங்களை மட்டுமே காட்டியுள்ளனர். அவர்களும் அதைப் பார்த்துவிட்டு இரண்டு வாரங்களில் அறிக்கை தருவதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள்” என்றும் குற்றம்சாட்டினார்.