தமிழ்நாடு
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில் நிபுணர் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மத்திய அரசின் அனுமதி பெற்று மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.
ஆனால் அந்த மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ கமிஷன் வகுத்த வழிமுறைகளின்படி இல்லை என்றும் பல கோடி முறைகேடு நடைபெற்றதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் கட்டுமான நிறுவனங்கள், அப்போதைய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டு சதி செய்து, கோடிக்கணக்கில் பொது மக்கள் பணத்தை முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி வசம் தான் பொதுப்பணி துறை இருந்தது. எனவே எடப்பாடி பழனிசாமி, அப்போது முதன்மை தலைமை பொறியாளராக இருந்த ராஜ்மோகன் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு கூட்டு சதியில் தொடர்பு இருப்பதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மத்திய, மாநில அரசுகளின் நிதியில், இந்த மருத்துவக் கல்லுாரிகள் கட்டப்பட்டுள்ளதால், தனது புகாரை விசாரிக்க, சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்து மீரான் ஆஜராகி, ”அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டு, கட்டுமானங்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விரிவான விசாரணை நடைபெறுகிறது” என்று கூறினார்.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடர்பாக மனுதாரர் ராஜசேகரன் தரப்பில் திருப்தி தெரிவித்ததால், மனுவின் விசாரணையை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.