நான் நினைத்திருந்தால் திமுகவில் சேர்ந்து இந்நேரம் அமைச்சராகி இருக்கலாம் – அதிர வைத்த ஓபிஎஸ்..!!
இந்தியா: தமிழ்நாடு
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை கடந்த ஆண்டு பூதாகரமாக வெடித்த நிலையில், ஓ பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுக கொடிகள், பெயர், சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதையடுத்து அதிமுகவின் கொடிகள், பெயர், சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுகவின் கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு எனும் பெயரில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது இரண்டாம் தர்மயுத்தம் நடைபெற்று வருவதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக தொண்டர்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள் என்றும், இந்த தர்ம யுத்தத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும், நீதிமன்றத்தில் உள்ள அதிமுக வழக்கின் தீர்ப்பு நமக்குச் சாதகமாகவே வரும் என்றும் நிர்வாகிகளுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார்.
மேலும் பேசியுள்ள ஓபிஎஸ், நான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக செய்திகளை பரப்பி வருகிறார்கள். அது போன்ற எண்ணம் எனக்கு எப்போதும் இல்லை. தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தற்காலிகமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கின்ற குழு தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயம் வழக்குகளில் வெற்றி பெற்று தொண்டர்களின் உரிமைகள் மீட்கப்படும். அதற்காகவே இந்தக் குழு. நான் திமுகவில் சேர்ந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுகவிலிருந்து விலகிச் சென்ற 9 பேர் தற்போது திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கின்றனர். நான் நினைத்திருந்தால் அப்படி அமைச்சராக ஆகியிருக்க முடியும். ஆனால் என்றும் நான் ஜெயலலிதாவின் தொண்டன். ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் படித்தவன் என ஓபிஎஸ் இந்தக் கூட்டத்தில் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.