வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தூத்துக்குடி, நெல்லை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…!!
தமிழ்நாடு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே 3 முறை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடக்கிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கூட்டணி தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். அந்த வகையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஐக்கிய ஜனதாதளம் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார், சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் ஏற்கனவே டெல்லி சென்றுள்ளனர்.
இந்தியா கூட்டணி தலைவர்களின் இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்யப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பெருமளவு பாதிப்பும், சேதமும் தவிர்க்கப்பட்டது. புயல் ஓய்ந்த மறுநாளே சென்னையில் போக்குவரத்து சீரானது. தற்போது தென் மாவட்டங்களில் மழையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வானிலை மையம் தெரிவித்ததை விடவும் அதிகமாக மழை பெய்துள்ளது. மத்திய அரசின் குழுவினர் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம்.
மத்திய அரசின் நிதி வரட்டும் என காத்திருக்காமல் 4 மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை அரசு அறிவித்தது. மத்திய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும். பிரதமரை சந்தித்து மிச்சாங் புயல் நிவாரணத்தோடு, தென் மாவட்ட பாதிப்புக்கு நிவாரணம் கோர உள்ளேன். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் கொட்டித் தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். தென் மாவட்டங்களில் 8 அமைச்சர்கள், 10 ஐஏஎஸ் அதிகாரிகள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தென்மாவட்டங்களுக்கு செல்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.