இம் மாத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை, மற்றும் உலக வங்கியிடமிருந்து நிதியுதவியைப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இரண்டாம் தவணையாக 337 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெறப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
787 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியானது வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்துவதையும் நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதேவேளை, கணிசமான அந்நியச் செலாவணி நாட்டிற்கு வருவதால், அது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்துவதாக நிதியமைச்சு குறிப்பிடுகிறது.
இதன்படி, 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 04 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.