தமிழ்நாடு
கடந்த 17 மற்றும் 18-ம் திகதி தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தையே மழை புரட்டி போட்டது. ஏரல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றளவும் தண்ணீர் வடியாமல் உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் பலரும் உதவி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஒருவர் கூட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவில்லையே என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில், தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய நாளை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளதாகவும், மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.