தமிழ்நாடு
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய இரண்டு நாட்கள் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் கடும் சேதமடைந்தன. பல கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் தனித் தனி தீவுகளாக காட்சியளித்தன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எனினும் வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “தமிழக அரசு இந்த வெள்ள சூழ்நிலையை மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டிருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை சரியாக எடுத்திருக்க வேண்டும். வானிலை ஆய்வு மையத்தை குறை சொல்கிறார்கள். ஏற்கனவே சென்னை வெள்ளம் என்ற அனுபவம் நமக்கு உள்ளது. குஜராத்தில் மழை வெள்ளம் வருகிறது என்றவுடன் 1 லட்சம் பேர் தாழ்வான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், தமிழகத்தில் திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிப்போய்விட்டது என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, தமிழிசை சௌந்தரராஜனை புதுச்சேரி ஆளுநர் வேலையை மட்டும் பார்க்கச் சொல்லுங்கள். பாஜகவின் செய்தித் தொடர்பாளராக அவர் மாற வேண்டாம். அவருக்கு இருக்கும் ஆளுநர் பணிகளை மட்டும் பார்த்தால் போதுமானது. தமிழிசையின் எதிர்காலத் திட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எங்காவது போட்டியிட வேண்டும் என்பதுதான்.
ஏற்கனவே எங்கே போட்டியிட்டாலும் அவருக்கு தமிழக மக்கள் தோல்வியைத்தான் பரிசாக கொடுத்துள்ளார்கள். நிச்சயமாக மீண்டும் தோல்வியைத்தான் பரிசாகத் தருவார்கள். ஆகவே புதுச்சேரி ஆளுநருக்கான உண்டான பணிகளை மட்டும் அவர் கவனித்தால் நல்லது என்று காட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.