மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும்…அப்போதுதான் நாடு சுபீட்சமாக இருக்கும் – ஓபிஎஸ்…!!
தமிழ்நாடு
சென்னையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி நடத்திய அதேநேரத்தில், கோவையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதையொட்டி, தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். இதன்போது அவர் பேசுகையில்…
பொதுக்குழு வழக்கு வரும் ஜனவரி 19 ம் திகதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் பொதுக்குழு தீர்மானம் தொடர்பாக தெளிவான முடிவுகள் கிடைக்கும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. என்னை கட்சியை விட்டு நீக்குவதற்கு அவர்கள் என்ன காரணம் சொல்கிறார்கள்? நான் யாருக்கு நம்பிக்கை துரோகம் செய்தேன் என்பதை அவர்களால் சொல்ல முடியுமா? இப்போதும் நான் அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறேன். நாம் ஒன்றுபட்டால்தான் வெற்றி அடையமுடியும். புரிய வேண்டியவர்களுக்கு இது புரியும். ஆனால் அதை காதில் வாங்க மறுக்கின்றனர்
மேலும் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு செயல்படுவதாக சொல்பவன் ஒரு முட்டாள். திமுக ஆட்சி குறித்து தினந்தோறும் அறிக்கைகள் கொடுத்து வருகிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் எங்களின் நிலைப்பாட்டை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறப்பான ஆட்சியை கொடுத்திருக்கிறது. எனவே மீண்டும் நரேந்திர மோடி தான் பிரதமராக வர வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். மோடி மீண்டும் பிரதமர் ஆனால் இந்தியா சுபீட்சமாக நன்றாக இருக்கும். பாஜகவுடன் எங்களது உறவு சுமூகமாக உள்ளது எனக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.