எப்போதும் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது – எடப்பாடி பழனிசாமி விளாசல்…!!
தமிழ்நாடு
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். இதன்போது அவர் பேசியதாவது…
அதிமுக ஆட்சிக் காலத்திலும் வார்தா புயல் உள்ளிட்ட பல புயல்கள் வந்துள்ளன. அப்போது புயல் வேகத்தில் செயல்பட்டு, புயலின்அடிச்சுவடே இல்லாமல் பணி செய்தோம். எப்போதுமே மத்திய அரசு தமிழ்நாடு கேட்கும் நிதியை வழங்குவதே இல்லை. அது காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் பாஜக ஆட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கான போதுமான நிதியை வழங்குவதில்லை. தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு கொடுத்ததாக சரித்திரமே இல்லை.
தமிழ்நாட்டை மத்திய அரசு எப்போதும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்துகிறது. தமிழ்நாட்டுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு தமது கடமையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதனிடையே அதிமுக நடத்திய மதுரை மாநாட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தமை குறித்து பேசிய அவர், மதுரை அதிமுக மாநாட்டை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார், ஆனால் அவர் அறிவித்த மாநாடுதான் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. அவரால் அறிவித்த திகதியில் மாநாட்டை நடத்த முடியாமல் போயிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மழை வெள்ளம் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இடம்பெற இருந்த இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.