இந்தியா
Trending

பெரும் வேதனை; அவரது வெற்றிடத்தை நிரப்புவது கடினம் – விஜயகாந்த் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!!

இந்தியா: தமிழ்நாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 71 வயதான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்தார். நடக்க முடியாமலும் பேச முடியாமலும் அவதிப்பட்ட விஜயகாந்த், வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த நவம்பர் மாதம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சைக்கு பிறகு நலம் பெற்று வீடு திரும்பினார்.

சமீபத்தில் சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்றார் விஜயகாந்த். ரோலிங் சேரில் வொய்ட் அன்ட் வொய்ட் உடையில் பங்கேற்ற விஜயகாந்த் தம்ப்ஸ் அப் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் விஜயகாந்த். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார்.

விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. சிறந்த நடிகராகவும் சிறந்த அரசியல் தலைவராகவும் சிறந்த மனிதராகவும் இருந்த விஜயகாந்தின் மரணம் பேரிழப்பு என அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடியும் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது கவர்ச்சியான நடிப்பு மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களைக் கவர்ந்தது என்றும் ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய அவர், பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார் என்றும் புகழ்ந்துள்ளார். விஜயகாந்தின் மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது என்றும் அது நிரப்ப கடினமாக இருக்கும் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் தனக்கு நெருங்கிய நண்பராக இருந்தார் என்றும் பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த சோகமான நேரத்தில், எனது நினைவுகள் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் ஏராளமான பின்தொடர்பவர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button