தமிழ்நாடு
தேமுதிக நிறுவனரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். நிமோனியா பாதிப்பால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு இப்போது இப்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், பலரும் நேரிலும் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக முதலில் அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அங்கே மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. அங்கே கோயம்பேடு பஸ் ஸ்டான்ட், கோயம்பேடு மெட்ரோ, தனியார் வணிக வளாகம் என இருப்பதால் அங்கு கடும் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இன்று அதிகாலை அவரது உடல் தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு இன்று அதிகாலை முதலே அஞ்சலி செலுத்தினர். அதிகாலை தொடங்கி மக்கள் கூட்டம் குறையாமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. பொறுமையாகக் காத்திருந்து பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்னும் சற்று நேரத்தில் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே விஜயகாந்த் உடல் இப்போது தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. விஜயகாந்த் உடல் இப்போது நகரின் முக்கிய சாலைகள் வழியே எடுத்துச் செல்லப்படும் நிலையில், சாலையின் இரு பக்கம் பொதுமக்கள் அணி வகுத்து நின்றனர். மக்கள் பலரும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அவரது உடல் தீவுத்திடலில் இருந்து ஈவேரா சாலை வழியாக கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கே மற்ற வாகனங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும், அங்கும் அதைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் கடுமையான டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் செல்லும் வழிநெடுக பொதுமக்கள் கூடியிருக்கும் நிலையில், போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கிறது. இது விஜயகாந்த் மீது அவரது ரசிகர்களும், பொதுமக்களும் எந்தளவுக்கு அன்பு வைத்துள்ளனர் என்பதையே காட்டுவதாக இருக்கிறது.