நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தை தேசிய பேரிடராக கருதி மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் – முதலமைச்சர் வேண்டுகோள்…!
இந்தியா: தமிழ்நாடு
நெல்லை, தூத்துக்குடியில் வந்த வெள்ளத்தை தேசிய பேரிடராக கருதி மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். முன்னதாக விமான முனையத்தை பார்வையிட்டு, அங்குள்ள சிறப்பம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.20,140 கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :
சென்னையில் இருந்து பினாங்கு, டோக்கியோ போன்ற இடங்களுக்கு நேரடி விமான சேவையை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி வழிவகை செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத்துறையை மேம்படுத்துவதோடு சுங்கவரியை ரத்து செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
திருச்சி BHEL நிறுவனத்தை நம்பி இருந்த MSME தொழில் நிறுவங்கள் நலிவடைந்து உள்ளன. இதனை கருத்தில் கொண்டு பிரதமர் BHEL நிறுவனத்திற்கு ஆர்டர்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் MSME தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
நெல்லை, தூத்துக்குடியில் நடந்த பேரிடரை தேசிய பேரிடராக கருதி மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் தொகுதி – 2 நிதியை விரைந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.