லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி? – எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசிக்கும் மாவட்ட செயலாளர்கள்…!!
இந்தியா: தமிழ்நாடு
அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையேயான உறவு முழுவதுமாக முறிந்து விட்டது. எந்த வித ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் பாஜக உடன் நெருக்கம் காட்டி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். லோக்சபா தேர்தலில் அமமுக, பாஜக உடன் இணைந்து செயல்பட விரும்புகிறார் ஓ.பன்னீர் செல்வம். அதனை வெளிப்படையாகவும் அறிவித்து விட்டார் ஓபிஎஸ்.
லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்று முடிவு செய்தால்தான் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேசி முடிவு செய்ய முடியும். வேட்பாளர்கள் பணிகளை தொடங்க முடியும். திமுக லோக்சபா தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. வழக்கமாக அதிமுகதான் தேர்தல் பணிகளை முதலில் தொடங்கும். இந்த ஆண்டு திமுக முந்திக்கொண்டு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் நடந்த அதிமுக, பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிக்காக அதிமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 10ஆம் திகதி நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைக்கலாமா? தனித்து போட்டியிடலாமா என்று அதிமுக மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துகளை கேட்டறிவார் என்றும் தெரிகிறது.