இந்தியா
Trending

சென்னை வெள்ளத்தில் சிக்கிய திருமாவளவன்; 2 நாட்கள் கோயில் சாம்பார் சாதம்தான் உணவு…!!

இந்தியா: தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் காரணமான ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோல டிசம்பர் 17,18 ஆகிய நாட்களில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை புரட்டிப் போட்டது.

இரண்டு வெள்ளத்தையும் பேரிடராக அறிவிக்கக் கோரியும், ரூ. 21,000 கோடி நிவாரண நிதியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் விசிக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. அத்துடன், 2024 மக்களவை தேர்தலில் வாக்குச்சிட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது…

மீண்டும் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மட்டும்தான் முதலில் ஆர்பாட்டம் வைத்திருந்தோம். ஆனால், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பேரிடராக அறிவிக்க முடியாது என அகந்தையோடு நிர்மலா சீதாராமன் தந்த பேட்டியை கண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால்தான் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிற முதல்வரின் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் அதனை ஆர்பாட்டத்தில் இணைத்தோம் என்று தெரிவித்தார்.

சென்னையில் டிசம்பர் 4ஆம் திகதி கடுமையான புயலை சந்தித்ததோடு வரலாறு காணாத மழையும் பெய்தது. சென்னையே இரண்டு நாட்கள் வெள்ளத்தில் மூழ்கியது. யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாத அளவு பெருமழையாக அது இருந்தது. ஆனால், நமக்கு வழக்கமாக தரும் நிதியை தந்துவிட்டு இனி கூடுதலாக தருவதற்கு வாய்ப்பு இல்லை என்று அலட்சியமாக கூறுகிறார்கள் என்று விமர்சித்தார்.

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நம்மால் ஓடோடிச் சென்று உதவி செய்ய முடியவில்லை. நானே இரண்டு நாட்கள் வரை வேளச்சேரிக்குள் சிக்கிக்கொண்டேன். எனக்கே முத்து மாரியம்மன் கோயிலில் சமைத்த சாம்பார் சாதம்தான் கிடைத்தது, இரண்டு நாட்கள் மின்சாரமின்றி தவித்தோம், உணவு விடுதிகள் கூட இல்லை என்று தான் வெள்ளத்தில் சிக்கிய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

ஆனால் தென் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டபோது 3 நாட்களில் 70 லட்சம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் உடைகளை விசிகவினர் தனக்கு அனுப்பி வைத்தனர் என்றும், இதனால் தென் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் ஓரளவு விசிகவால் உதவ முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button