இந்தியா: தமிழ்நாடு
அரசியல் கட்சிகளில் இளைஞர் அணி, மகளிர் அணி என்பது போல மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி என ஏராளமான பிரிவுகள் உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளில் இதுபோன்று பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சேலத்தில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பலர் பாஜகவில் இணைந்தனர். ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் சுமார் 100 அதிகாரிகள் தங்களுடைய குடும்பத்தினருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாஜகவில் இணைவது மிகவும் மகிழ்ச்சியக்கிறது. சமூகத்தின் பாதுகாப்பிற்காக மிக நேர்மையான முறையில் செயல்பட்ட காவல்துறையினர் ஓய்வு பெற்ற பின்னர் பாஜக இணைவது பொதுமக்களிடையே மிகுந்த எழுச்சியை உருவாக்கும். காவல் துறையினருக்கான பிரிவு கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று தொடங்கப்படும்.
கட்சியில் இணைந்துள்ள முன்னாள் காவல்துறையினர், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டு தங்களது பகுதிகளில் கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், காவல் துறையினருக்கு 8 மணிநேர வேலை, வாரத்திற்கு இரண்டு நாள் விடுமுறை மற்றும் மன அழுத்தம் இல்லா பணி வாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் பாஜகவில் இணைந்த சம்பவம் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் பலர் இதற்கு முன்பு திமுக, அதிமுகவிலும் இணைந்துள்ளனர். ஆனால், ஒரே சமயத்தில் பலரை ஒருங்கிணைத்து, காவல்துறையினரை பாஜகவில் சேர்ப்பதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை ஆர்வம் காட்டுவது, மற்ற கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.