இந்தியா: தமிழ்நாடு
எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதச்சார்பின்மை மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இந்த மாநாட்டிற்கு கூடியிருக்கும் கூட்டம் தான், தமிழகத்தின் மதச்சார்பின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. நான் முதல்வர் ஆவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது. உங்களை போலத்தான் நானும் அமர்ந்து இருந்தேன். ஆனால் அப்படியே உட்கார்ந்தே இருக்கவில்லை. தவழ்ந்து சென்றேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக தவழ்ந்து தவழ்ந்து தான் உயர்ந்த பதவிக்கு வந்தேன். அதுதான் உழைப்பு. ஆனால் அந்த உழைப்பை கூட சிலர் கொச்சைப்படுத்துகிறார்கள்.
முதல்வர் மு.க. ஸ்டாலினும் அதை கொச்சைப்படுத்தி பேசுகிறார். உழைப்பு என்றால் என்னவென்று ஸ்டாலினுக்கு தெரியுமா? ஒரு சாதாரண கிளைச்செயலாளராக இருந்தவன் நான். பின்னர் உழைப்பால் பொதுச்செயலாளர் ஆனேன். அதன் பிறகு முதலமைச்சர் ஆனேன். ஆனால் முதல்வர் ஸ்டாலினின் கதை அப்படியா? அவரது அப்பாவின் மூலமாக எந்த உழைப்பும் இல்லாமல் நேராக எம்எல்ஏ ஆகி, முதல்வர் ஆனவர் தான், தமிழகத்தை இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
சொல்லும் செயலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதுதான் எங்கள் கொள்கை. எங்கள் தலைவர்கள் எங்களுக்கு சொல்லித் தந்ததை தான் அதை தான். அதிமுக என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்கும் என்பதை இங்கு உறுதியாக கூறிக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.