இந்தியா: தமிழ்நாடு
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வந்த பாஜக ஆட்சியானது, ஒரு இறுதிப் போர் நடத்துவதற்கான சூழலை இன்று உருவாக்கி இருக்கிறது. 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்திய மண்ணில் நடக்கப் போகிற ஒரு இறுதி யுத்தம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இது ஒரு இறுதி போர். சங் பரிவாரங்களா அல்லது ஜனநாயக சக்திகளா, சனாதன சக்திகளா அல்லது ஜனநாயக சக்திகளா என்கிற கேள்விக்கு விடை காணக்கூடிய ஒரு யுத்தம் தான் 2024-இல் நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தல்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக அந்த இருக்கையில் அமர்ந்தால், நாம் இங்கே எந்தக் கருத்தியலையும் பேச முடியாது. உரையாடல்களை நிகழ்த்த முடியாது. நம் மண்ணை காப்பாற்ற முடியாது. மக்களையும் காப்பாற்ற முடியாது. மிகப்பெரிய நெருக்கடிக்குள் நாம் தள்ளப்படுவோம். இது கற்பனை இல்லை. பாஜக மீதான வெறுப்பால் பேசுகின்ற வெறுப்பு அரசியல் இல்லை. இதுதான் யதார்த்தம்.
இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட கட்சிகள், அம்பேத்கர் இயக்கங்கள் ஆகியவை அகில இந்திய அளவில் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய அவசியம் இன்று உருவாகியுள்ளது. வலதுசாரி அரசியல், இடதுசாரி அரசியல் என அரசியலை நாம் இரண்டாக பிரித்து பார்க்கின்ற போது, இன்றைக்கு காங்கிரஸ் நிற்கக்கூடிய களமானது இடதுசாரி அரசியலுக்கான களம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.