மீண்டும் வெற்றி வாகை கூடிய ஷேக் ஹசீனா – பங்களாதேஷ் பிரதமருக்கு ரணில் அனுப்பிய செய்தி
பங்களாதேஷ் நாட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் ஹசீனாவுக்கு இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளதாவது, பங்களாதேஷ் மக்களுக்கு ஷேக் ஹசீனா வழங்கிய திறமையும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைமைத்துவமே இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவுமிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றுள்ளதுடன், பரஸ்பர நன்மைகளை வழங்கும் வகையில் அந்த உறவுகள் மேலும் விரிவடைந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கூடிய விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கும் பங்களாதேஷ்க்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புறவை மேம்படுத்துவதற்கும் இந்த விஜயம் உதவும் எனவும் தெரிவித்தார்.