கடந்த டிசம்பர் 28ம் திகதி கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது தமிழ்நாட்டு மக்களுக்கே பேரதிர்ச்சியாக மாறியது. இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால், விஜயகாந்த் மறைவின் போது வெளிநாட்டில் இருந்த நிலையில், இறுதி ஊர்வலத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்காக வீடியோவும் வெளியிட்டு மன்னிப்புக் கேட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை திரும்பிய விஷால் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். நடிகர் ஆர்யா மற்றும் விஷால் ஒன்றாக இணைந்து வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விஷால் எங்க விஜயகாந்த் அண்ணன் சாமி மறைவின் போது நான் ஊரில் இல்லாமல் போய் விட்டது என்னை ரொம்பவே வாட்டி வருகிறது. என்னை மன்னிச்சிடு சாமின்னு தான் அவர் சமாதியில் வேண்டிக் கொண்டேன் என்று கூறினார்.
கேப்டன் விஜயகாந்த் சமாதியில் மாலை அணிவித்து மனமுருகி வேண்டிக் கொண்ட விஷால் அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து விஜயகாந்த் பற்றியும் அவரது அலுவலகத்துக்கு யார் சென்றாலும் பசியோடு திரும்பிப் போக மாட்டாங்க, விஜயகாந்த் அண்ணனும் ராவுத்தர் அண்ணனும் பலருக்கும் உணவளித்த விஷயங்களை எடுத்துரைத்தார்.
மேலும் நடிகர் சங்க கட்டடத்துக்கு கண்டிப்பா கேப்டன் விஜயகாந்த் பெயர் வைப்பது உறுதி என விஷால் கூறியுள்ளார். அதில், உள்ள நிர்வாகிகள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என யாருமே மாற்றுக் கருத்து சொல்ல மாட்டார்கள். அந்த அளவுக்கு நடிகர் சங்கத்துக்கு பல விஷயங்களை செய்தவர் விஜயகாந்த் அண்ணா என்று பேசினார்.