லோக்சபா தேர்தலுக்கு தயாராகுங்கள் – அதிமுக நிர்வாகிகளுக்கு ஜெயக்குமார் வலியுறுத்தல்..!
இந்தியா: தமிழ்நாடு
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் லோக்சபா தேர்தலின் போது தொண்டர்கள் நிர்வாகிகள் செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் வேட்பாளர்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் வாக்குகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிமுகவினர் வாக்குகளை குறிவைத்து நீக்கி வருவதாக திமுகவினர் மீது குற்றம் சாட்டிய ஜெயக்குமார், வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்கள், இடம் மாறி சென்றவர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளதாக தொவித்தார்.
வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை கண்காணித்து தேர்தல் ஆணையத்திற்கு சொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார். கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. தமிழ்நாடு போராட்ட களமாக மாறி விட்டது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. இது பற்றி மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று ஜெயக்குமார் கூறினார்.