இந்தியா
Trending

அண்ணாமலை சிறுபான்மை மக்களை அச்சுறுத்துகிறார்; கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சிங்களா? – சீறும் திருமா..!!

இந்தியா: தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணத்தை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் தருமபுரி மாவட்டத்தில் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டார்.

அப்போது மேட்டூரிலிருந்து பாப்பிரெட்டிப்பட்டிக்கு வரும் வழியில் பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டியில் உள்ள தூய லூர்து அன்னை மேரி தேவாலயத்திற்கு சென்றார். ஆனால் அங்கே திரண்டிருந்த சில கிறிஸ்தவ இளைஞர் லூர்து மாதா சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மணிப்பூர் கலவரத்தில் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டபோது பாஜக என்ன செய்தது என கேட்டு வாக்குவாதம் செய்தனர். அண்ணாமலை தொடர்ந்து பொறுமையாக பதில் அளித்தும் அந்த இளைஞர்கள் அண்ணாமலை, லூர்து மாதா சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக மத அரசியல் செய்கிறது என்றும் குற்றம்சாட்டினர்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, மணிப்பூர் கலவரத்தை வைத்து திமுகதான் மத அரசியல் செய்கிறது என்றார். ஆனாலும் அந்த இளைஞர்கள் அண்ணாமலையை சர்ச்சுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்திற்கு பிறகு கடுப்பான அண்ணாமலை, இந்த சர்ச் உங்களுடையதா? இந்த இடம் உங்கள் பெயரில் உள்ளதா? நீங்கள் யார் என்னை சர்ச்சுக்குள் போகக்கூடாது என்று சொல்ல என திருப்பி கேட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், அந்த இளைஞர்களை விரட்டியடித்தனர். இதையடுத்து அண்ணாமலை லூர்து மாதா சிலைக்கு மாலை அணிவித்து வழிபாடு செய்துவிட்டு சென்றார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், அண்ணாமலையின் இந்த பேச்சு சிறுபான்மை மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல் என்றார். தமிழ்நாட்டில் வட இந்திய அரசியலை செய்ய பாஜக முயற்சி செய்கிறது என்றும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை வெளிப்படையாக அண்ணாமலை இப்படி அச்சுறுத்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்றார்.

மேலும் இதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கேட்பாரற்றவர்கள் இல்லை, சிறுபான்மையினருக்கு எந்த வடிவத்தில் அச்சுறுத்தல் இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து எதிர்கொள்வோம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button