நாடாளுமன்ற தேர்தலில் அந்த சின்னத்தில்தான் போட்டியிடுவேன் – அதிரடியாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்…!!
இந்தியா: தமிழ்நாடு
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாகவும், கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தை நாடியிருந்தாலும், அதில் இபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்புகள் வந்தன. அதுமட்டுமல்லாது அதிமுகவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எனவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. தென் மாவட்டங்களை பொறுத்த அளவில் மொத்தம் 35 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இதில் திமுக கடந்த முறை 25 தொகுதிகளிலும் அதிமுக 14 தொகுதிகளையும் வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் டிடிவி தினகரன் மட்டும் ஏறத்தாழ 4 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறார். குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை தொகுதிகளில் அதிகமான அளவில் தினகரன் வாக்குகளை வாங்கி இருக்கிறார்.
எதிர்வரும் தேர்தலில் இவர் ஓபிஎஸுடன் கைகோர்க்க இருப்பதால் தேர்தல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், திருச்சியில் நேற்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ‘அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு’ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “நாட்டை 10 ஆண்டுகள் சிறப்பாக ஆண்ட மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும். இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவேன். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தொண்டர்களும், எடப்பாடி தரப்பில் உள்ளவர்களும் என்னிடம் பேசி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.