எதிர்ப்பை மீறி மாதா சிலைக்கு மாலை அணிவித்த விவகாரம் – அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!!
இந்தியா: தமிழ்நாடு
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 ஆம் திகதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது பி.பள்ளிப்பட்டி லூர்து அன்னை பேராலயத்தில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அங்குள்ள மாதா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றார்.
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர், அண்ணாமலையிடம், ஏன் மணிப்பூர் விவகாரத்தில் பாஜக தலையிடவில்லை என்று கேள்வி எழுப்பியதுடன் மாதா சிலைக்கு மாலை அணிவிக்கக்கூடாது என்று அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து தகவலறிந்த போலீசார், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் மாதா சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து சென்றார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதி சிறுபான்மையின மக்கள், அண்ணாமலை அணிவித்த மாலையை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, பொம்மிடி காவல்நிலையத்தில் கார்த்திக் என்பவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் கொடுத்தார்.
அதன்பேரில் அண்ணாமலை மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடு பேசுவது, பொது அமைதியை குலைக்க தூண்டும் வகையில் பேசுவது, வெவ்வேறு வகுப்புகளுக்கிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் பேசுவது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பொம்மிடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.