வேட்டி சட்டையை மாத்தலாம்..என் உடம்புல ஓடுற அதிமுக ரத்தத்தை மாத்த முடியுமா? – அதிர வைத்த ஓபிஎஸ்…!!
இந்தியா: தமிழ்நாடு
கடந்த 2022 ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு சார்பாக தேனி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “இது இறுதித் தீர்ப்பு இல்லை. அனைத்து அம்சங்களையும் கேட்டு விசாரணை நடத்தி 19ஆம் திகதி தீர்ப்பளிப்பதாக நீதியரசர்கள் தெரிவித்துள்ளார்கள். எங்கள் தரப்பில் அனைத்து அம்சங்களையும் நீதிமன்றத்தில் வாதங்களாக வைப்போம்.
கட்சியில் பிளவு இருந்தால் வெற்றிபெற முடியாது என்பதால் தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வருகிறோம். ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட தோல்வி. சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க அதிமுக எம்பிக்களை அனுப்பி வைத்தது எடப்பாடி பழனிசாமி தான். தற்போது நிலைமைக்கு தகுந்தார் போல மாற்றி மாற்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பொய்கள் பேசுவதில் அவர் மிகவும் வல்லவர்.
பிரிந்த சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களது எண்ணம். எங்கள் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம். அதை எவராலும் மாற்ற முடியாது. கட்சி, கொடியை பயன்படுத்த தடை வாங்கலாம். தீர்ப்புகளின் மூலமாக வேஷ்டிகள் சட்டைகளை மாற்றலாம். ஆனால், எங்கள் உடம்பில் ஓடும் ரத்தத்தை மாற்ற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார் ஓ.பன்னீர்செல்வம்.