இந்தியா: தமிழ்நாடு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், ராயக்கோட்டை, தளி, ஓசூர் ஆகிய பகுதிகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” அண்மையில் யாத்திரை மேற்கொண்டார். ராயக்கோட்டைக்கு வந்த அண்ணாமலைக்கு மேள தாளங்கள் முழங்க காவடி ஆட்டம் ஆடி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அண்ணாமலை காவடி ஆடியவர்களிடம் காவடியை வாங்கி அவரும் அவர்களுடன் சேர்ந்து ஆடினார். அப்போது அண்ணாமலை காலணி அணிந்திருந்தார். காலணி அணிந்தபடி அண்ணாமலை காவடி எடுத்து ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை காலணியுடன் காவடி எடுத்ததற்கு காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அண்ணாமலை காலணியுடன் காவடி எடுத்து கடவுளை அவமானப்படுத்தியது கண்டனத்துக்கு உரியது, அதற்காக அவர் முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநில செயலாளர் சூர்யமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராம் கூறுகையில், “காலணியோடு காவடி எடுக்கிறார். வன்மையாக கண்டிக்கிறோம் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு மிகவும் எல்லோரும் பயபக்தியுடன் செய்யும் சடங்கு இது. பிஜேபி தமிழ் மக்களின் நம்பிக்கை அவமதிப்பு செய்யலாக கருதவேண்டும். அண்ணாமலை கத்துக்குட்டி இப்படி அவமதிப்பு செய்வதை நிறுத்தி கொள்ளவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.