உலகில் உள்ள அனைத்து நாடுகளுமே வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். அதன்படி பணக்கார வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதி அளிக்கும் வகையில் “கோல்டன் விசா” திட்டத்தை ஆஸ்திரேலிய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தி இருந்தது. இதற்கிடையே இந்தத் திட்டத்தை நிறுத்துவதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை ஆஸ்திரேலிய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதற்குப் பதிலாக ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்குக் கணிசமான பங்களிப்பைத் தரும் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு அதிக விசாக்களை தர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் அதன் முதன்மை நோக்கங்களைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் இதற்குப் பதிலாகத் திறமையான தொழிலாளர்களுக்கு அதிக விசா வழங்குவதில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விசா முறை நமது நாட்டிற்கும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும் தேவையான பங்களிப்பைத் தரவில்லை என்பது இத்தனை ஆண்டுகளில் தெளிவாகத் தெரிவதாக ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் தெரிவித்தார்.
வெளிநாட்டு வணிகத்தையும் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஈர்க்கவே இந்த கோல்டன் விசா திட்டம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், ஊழல் அதிகாரிகளால் சட்டவிரோதமாக தங்கள் பணத்தை ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வர இந்த கோல்டன் விசா முறையைப் பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்தன.
2012இல் இத்திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை பல ஆயிரம் பேர் இந்த கோல்டன் விசாக்களை பெற்றுள்ளன. இதுவரை கோல்டன் விசாக்களை பெற்றவர்களில் சுமார் 85% பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கோல்டன் விசாவை ஒருவர் பெற $5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர், அதாவது குறைந்தது 27 கோடி ரூபாயை ஒருவர் ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய வேண்டும்.
இது குறித்து அந்நாட்டு வல்லுநர்கள் கூறுகையில், “மிக நீண்ட காலமாக, ஊழல் அதிகாரிகள் மற்றும் தங்கள் சட்டவிரோத நிதியை ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வர இதைப் பயன்படுத்தினர். கோல்டன் விசா அவர்கள் குற்ற வரலாற்றை மறைக்கவே உதவியது” என்று சாடியுள்ளனர்.