“அசிங்கப்படுத்திட்டோம்! மன்னிச்சிடுங்க” – பள்ளி மாணவர்கள் காலில் விழுந்த பாமக எம்எல்ஏ..!!
இந்தியா: தமிழ்நாடு
சேலம் மாவட்டம் பாகல்பட்ட கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
அப்போது திடீரென அந்த நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏவான அருள் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். இதனை பார்த்த திமுகவினர் கோபத்தில் கொந்தளித்தனர். “இது தமிழக அரசு ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி. இதில் திமுககாரங்க நாங்க தான் இருக்கணும். நீ வரக்கூடாது” எனக் கூறினர். அதற்கு எம்எம்ஏ அருளோ, “இது என்னோட சட்டமன்றத் தொகுதி. நான் எம்எல்ஏ. இங்கே நடக்குற நிகழ்ச்சிக்கு நான் வராம வேற யார் வருவா?” என்று கேட்டார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும், வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதை பார்த்த அங்கிருந்த மாணவ, மாணவிகள் பயந்து போய் கூச்சலிட்டனர். அப்போது இதை பார்த்த பாமக எம்எல்ஏ அருள், “நான் உங்களிடம் (மாணவர்கள்) பேசதான் வந்தேன். அரசியல் செய்ய வரவில்லை. ஒழுக்கத்தை கற்பிக்கும் இந்த புனிதமான இடத்தில் உங்களை அசிங்கப்படுத்தி விட்டார்கள். அவர்களுக்கும் சேர்ந்து நான் உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறி மாணவர்கள் முன்னிலைில் சாஷ்டாங்கமாக விழுந்தார் எம்எல்ஏ அருள்.
இதை பார்த்து மாணவ, மாணவிகள் பதறி போய் எழுந்து நின்றனர். ஆனால், மீண்டும் அவர்கள் காலில் விழுவதாக கூறி எம்எல்ஏ அருள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். இதனால் அந்த இடமே பரபரப்பானது. மாணவ – மாணவிகளும் ஒன்றும் புரியாமல் பயத்தில் முகம் வெளுத்து போய் நின்றிருந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளஙகளில் வேகமாக பரவி வருகிறது.