53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த ஜனவரி 25 ஆம் திகதி தொடங்கி வருகிற பெப்ரவரி 4 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நாடுகளிலிருந்து திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அந்த வகையில், பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில் ராம் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ தேர்வாகியது. இப்படம் இன்னும் வெளிவராத நிலையில் முதல் முறையாக அங்கு கடந்த 30ஆம் தேதி திரையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த விழாவின் லைம்லைட் பிரிவில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படமும் தேர்வாகியது. மேலும் விடுதலை இரண்டாம் பாகமும் இதில் ப்ரீமியர் செய்யப்பட தேர்வாகியது. அதன்படி ‘விடுதலை பாகம் 1’ நேற்று திரையிடப்பட்டது. படம் முடிந்தவுடன் திரையரங்கில் அமர்ந்திருந்த அனைவரும், எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர். இதை தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்து, அது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளது. விடுதலை இரண்டாம் பாகம் வருகிற 3ஆம் திகதி திரையிடப்படவுள்ளது.
விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாகம் 1 கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.