
Shanu
காசாவில் போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கும் சூழலில் அதனை மீறி இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் மேலும் சில பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இந்தப் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படை நடவடிக்கை தொடரும் சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடையை தளர்த்தியதை அடுத்து இஸ்ரேலுக்கு எம்.கே.-84 கனரக குண்டுகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.பலவீனமான இந்த போர் நிறுத்தம் முறியும் அபாயம் நீடித்து வந்த சூழலில் மத்தியஸ்தர்களின் முயற்சியை அடுத்து கடந்த சனிக்கிழமை மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்ததோடு அதற்கு பகரமாக சுமார் 369 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
மேலும் சில பலஸ்தீன கைதிகளுடனான பஸ்கள் காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையை சென்றடைந்தன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நான்கு பலஸ்தீன கைதிகள் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்கள் காரணமாக கவலைக்கிடமான நிலையில் மேற்குக் கரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காசா போர் ஆரம்பித்தது தொடக்கம் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.