விளையாட்டு

யாழ்ப்பாண மத்திய கல்லூரி கிரிகெட் போட்டிக்கு தகுதி - நியூட்டன் சாகசம்

Shanu

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்டு வரும் பாடசாலைகளுக்கு இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இரண்டாம் பிரிவு பி அடுக்கில் பங்குபற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

மக்கொன, சரே விலேஜ் மைதான புற்தரை ஆடுகளத்தில் (Turf wicket) நேற்று நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் கிரிக்கெட்டின் அரை இறுதிப் போட்டியில் காலி, வித்யாலோக்க மகா வித்தியாலய அணியை எதிர்கொண்ட யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, அணித் தலைவர் ரஞ்சித்குமார் நியூட்டனின் அற்புதமான சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் 9 விக்கெட்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

அப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  வித்யாலோக்க மகா வித்தியாலய அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

சச்சித்ய இந்துவர (12) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 7 ஓவர்களை மிக அற்புதமாக வீசி 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கணேசலிங்கம் மதுசுதன் 9.3 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 11.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

ஆரம்ப வீரர் ரஞ்சித்குமார் நியூட்டன் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி சார்பாக ரஞ்சித்குமார் நியூட்டன் (தலைவர்), மதீஸ்வரன் கார்த்திகன், பத்மகுமாரன் நவிந்தன், தகுதாஸ் அபிலாஷ், சதாகரன் சிமில்டன், அன்ரன்நிரேஷன் அபிஷேக், விக்ணேஸ்வரன் பருதி, முரளி திசோன், வெலன்டைன் ஹரிஷ், கணேசலிங்கம் மதுசுதன், ரஞ்சித்குமார் அக்ஷயன் ஆகியோர் விளையாடினர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கடந்த வருடமும் சம்பியனாகி இருந்தது.யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அடுத்த மாதம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் கம்பஹா ஹேனகம மத்திய கல்லூரியை எதிர்த்தாடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button