போப் பிரான்சிஸ் உடல் நிலையில் மாற்றம்

Shanu
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 12ஆவது ஆண்டை போப் பிரான்சிஸ் (88) நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில் அவருடைய உடல் நிலையில் தொடர் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 14ஆம் திகதி ரோம் நகரின் ஜெமெலி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது. இதை தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
போப் உடல் நலன் விரைவில் குணமடைய வேண்டி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். நான்கு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து வத்திக்கான் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின்படி, போப்பின் உடல்நிலை நிலையானதாகவே உள்ளது. நேற்றுமுன்தினம் எடுக்கப்பட்ட எக்ஸ் ரே அறிக்கை, முந்தைய நாட்களில் காணப்பட்ட முன்னேற்றங்களை கதிரியக்க ரீதியாக உறுதிப்படுத்தியுள்ளது.
வாய் வழியாக செயற்கை முறை ஆக்ஸிஜன் வழங்கல் சிகிச்சையும் தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. கிறிஸ்தவர்களின் தலைவராக போப் பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்றுடன் 12 ஆண்டு நிறைவு பெற்றது. இதையொட்டி வத்திக்கான், ரோம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு திருப்பலிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.