
Shanu
சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய யுக்ரேன் தரப்பினர், அமெரிக்கா பரிந்துரைத்தபடி உடனடியாக அமலாகும் வகையில் ரஷ்யாவுடன் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்தனர்.
இனி இந்த விஷயத்தில் “ரஷ்யாதான் முடிவெடுக்க வேண்டும்” என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.இனி இந்த நேர்மறையான முன்மொழிவை ஏற்றுக் கொள்ளும் வகையில் ரஷ்யாவை சமாதானப்படுத்துவது அமெரிக்காவின் கையில் இருக்கிறது என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்தில், டிரம்ப், ஸெலன்ஸ்கி இடையே நடைபெற்ற அசாதாரணமான வார்த்தைப் போருக்குப் பின்னர், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் அதிகாரப்பூர்வ முதல் சந்திப்பாக ஜெட்டாவில் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பு அமைந்தது.
இரு தரப்பும் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் யுக்ரேனுக்கான பாதுகாப்பு உதவிகள் மற்றும் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கை உடனடியாக மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதவிகளை, யுக்ரேன் அதிபர் உடனான ஓவல் அலுவலக சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது.
இரு தரப்பு கூட்டறிக்கையில் “இரு தரப்புப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கான குழுக்களின் பெயர்களை அறிவிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். யுக்ரேனின் நீண்ட கால பாதுகாப்புக்காக அமைதியை எட்டுவதற்கான பேச்சுவார்தையைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெட்டாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மார்கோ ரூபியோ இந்த முன்மொழிவை ரஷ்யா ஏற்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.”யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையைத் தொடங்க யுக்ரேன் தயாராக உள்ளது” எனக் கூறிய ரூபியோ ஒருவேளை ரஷ்யா இதை நிராகரித்தால், “அமைதிக்குத் தடையாக யார் இருக்கிறார்கள் என்பதை துரதிர்ஷ்டவசமாக நாம் தெரிந்து கொள்வோம்” எனக் கூறினார்.”போரை நிறுத்தவும், உடனடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், நாங்கள் வழங்கிய ஒரு திட்டத்தை யுக்ரேன் இன்று ஏற்றுக்கொண்டது” எனவும் அவர் தெரிவித்தார்.
“நாங்கள் இந்தத் திட்டத்தை ரஷ்யா தரப்புக்கு எடுத்துச் செல்வோம். அவர்களும் அமைதியை ஆமோதிப்பார்கள் என நம்புகிறோம். இனி முடிவு அவர்கள் கையில் உள்ளது” என்றார் ரூபியோ.கடலிலும், வான் பரப்பிலும் மட்டும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற ஸெலென்ஸ்கியின் முன்மொழிவைவிட இந்த 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவு பரந்துபட்டதாக இருக்கிறது.
ஜெட்டாவில் நடந்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்காக யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, டிரம்புக்கு நன்றி தெரிவித்தார். ஸெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், “போரை நிறுத்துவதற்கோ அல்லது தொடர்வதற்கோ ரஷ்யா தனது விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும். இது முழு உண்மைக்கான நேரம்” என்று கூறியுள்ளார்.ரஷ்யா இதுவரை ஏதும் பதிலளிக்காத நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகை செவ்வாய்க்கிழமை முன்கூட்டியே அளித்த தகவல்களின்படி, பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து அமெரிக்காவுடன் விவாதித்த பிறகு ஓர் அறிக்கை வெளியிடப்படும்.
பிப்ரவரி 2022 முதல் யுக்ரேனில் முழுமையான ஆக்கிரமிப்பை ரஷ்யா தொடங்கியது. யுக்ரேனின் நிலப்பரப்பில் 20 சதவீதத்தை தற்போது மாஸ்கோ கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசவுள்ளதாகவும் தமது முன்மொழிவுகளை அவர் ஏற்பார் என்று நம்புவதாகவும் கூறியிருந்தார்.”அவர்கள் கூறுவதைப் போன்று, இது இரு தரப்பு ஒப்புதல்களுக்கு உட்பட்டது” எனக் கூறிய டிரம்ப் அடுத்த சில நாட்களில் இந்தத் திட்டமானது ஏற்றுக் கொள்ளப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.”எங்களுக்கு ரஷ்யாவுடன் நாளை பெரிய சந்திப்பு இருக்கிறது, சில சிறந்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என நம்புகிறோம்” என்பது டிரம்பின் கூற்றாக இருக்கிறது. யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியை மீண்டும் வாஷிங்டன் அழைப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறினார்.ரஷ்யாவின் வெளிநாட்டு ஊடகம் ஒன்றில் வழங்கிய தகவல்களின்படி, வரும் சில நாட்களில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை இருக்கிறது என்பதை ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளரான மரிய ஸகரோவா மறுக்கவில்லை.