அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளையும் (09) சுகயீன விடுமுறையில் சென்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அஞ்சல், நில அளவையாளர், விவசாய ஒழுங்குமுறை, கிராம அலுவலர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அரச மற்றும் மாகாண பொது முகாமைத்துவ சங்கத்தின் தலைவர் என்.எம்.விஜேரத்ன தெரிவித்தார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவாக அஞ்சல் ஊழியர்களும் நேற்று (07) மாலை 4 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் சேவை தொழிற்சங்க ஒன்றியத்தின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
அத்துடன், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று பணிக்கு சமூகமளித்துள்ள போதிலும், நாளை சுகயீன விடுமுறையை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதேவேளை, சுகாதார துறையுடன் தொடர்பான அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் தாதியர் சங்கம், இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ளன.
அதன்படி, சுகாதார துறை பணிகள் சிக்கல் இன்றி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் திட்டமிட்டு மேற்கொள்ளவுள்ள பணிப்புறக்கணிப்பினால் அரச சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.