சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
பிஜப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா ஆகிய எல்லைப் பகுதிகளில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தச் சூழலில் நேற்று (ஜூலை 17) தேடுதல் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது பிஜாபூர் மாவட்டத்தில் உள்ள டர்ரெம் பகுதியில் நக்சலைட்டுகள் நடத்திய திடீர் வெடிகுண்டு தாக்குதலில் ராய்ப்பூரைச் சேர்ந்த பரத் சாஹு மற்றும் நாராயண்பூரைச் சேர்ந்த சத்யர் சிங் காங்கே ஆகிய இரு வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் நடந்த பகுதிக்கு கூடுதலாக வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த வீரர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, நக்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புதன்கிழமை மகாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள வண்டோலி கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 12 நக்சல்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன.