இலங்கை ரி20 அணியின் புதிய அணித் தலைவரானார் சரித் அசலன்க
இலங்கை ரி20 அணியின் புதிய அணித் தலைவரானார் சரித் அசலன்க
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக வரக்கூடியவர் என மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சரித் அசலன்கவுக்கு அணித் தலைவர் பதவி உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருக்கு சரித் அசலன்கவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக நியமித்தது.
2016இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணித் தலைவராக விளையாடிய சரித் அசலன்க, அந்தத் தொடரில் மிகத் திறமையாக விளையாடியிருந்தார்.
அப் போட்டியில் அவர் 3 அரைச் சதஙகளுடன் 276 ஓட்டங்களை மொத்தமாக குவித்திருந்தார்.
மிக அண்மையில் வனிந்து ஹசரங்க இடைக்காலத் தடையை எதிர்கொண்டிருந்தபோது பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு ரி20 போட்டிகளில் சரித் அசலன்க பதில் அணித் தலைவராக விளையாடியிருந்தார்.
இந்த வருடம் லங்கா பிறீமியர் லீக்கில் ஜெவ்னா கிங்ஸ் அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட சரித் அசலன்க அவ்வணியை மீண்டும் சம்பியனாக்கி பெருமை பெற்றார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் இன்று வெளியிட்பட்ட 16 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாத்தில் குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், இளம் சகலதுறை வீரர் சமிந்து விக்ரமசிங்க ஆகியோரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.