
Shanu
கடவுச்சீட்டு விநியோகச் செயற்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் எஞ்சியுள்ள கடவுச் சீட்டுக்களை, ஒரு மாத காலத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்திலே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இக்கூட்டம் (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
கடவுச்சீட்டுக்களைப் பெறுவதில் இழக்கப்பட்ட பொதுமக்களின் நம்பிக்கையை மீளவும் உயர்த்தும் அரசாங்கத்தின் உயரிய நோக்குகளை விளக்கிய அமைச்சர், முழு நாள் சேவையை அறிமுகப்படுத்திய தையும் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் இவ்வுயரிய நோக்கத்துக்காக அர்ப்பணித்துச் செயற்படும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள ஊழியர்களின் அர்ப்பணிப்புக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், உரிய அச்சு இயந்திரங்கள் கிடைத்ததும் யாழ்ப்பாணத்திலும் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் திறக்கப்படும் என்றார்.மேலும், இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளும் கலந்துரையாடப்பட்டன.
உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் சவால்களை கருத்திற் கொண்டு இவ்விடயம் தீர்மானிக்கப்படும். பாதுகாப்புத் தேவைப்படும் எம்.பி.க்கள் தமக்கு ஏற்பட்டுள்ள சவால்கள், அச்சுறுத்தல்களைப் பட்டியலிட்டுச் சமர்ப்பிக்க வேண்டும்.மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெற்ற பின்னர்,சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு பாதுகாப்புத் தேவையெனின் அதகுரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளின் தற்போதைய நிலைமை மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இதில்,கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த பதில் பொலிஸ்மா அதிபர், பிரதானமாக போதைப்பொருள் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு பாதாளச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. வெளிநாடுகளிலிருந்து இந்தப் பாதாளக் குழுக்கள் இயக்கப்படுகின்றன.முதலில்,வௌிநாடுகளிலிருந்து இயக்குவோரை அடையாளம் காண்பது அவசியம்.பின்னர்,உள்ளூரில் செயற்படுவோரை அடையாளம் கண்டு அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
வௌிநாடுகளில் செயற்படுவோரைக் கைது செய்ய இராஜதந்திர மட்ட அணுகுமுறைகள் அவசியம் என்று பதில் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம் குறைக்கப்படும் என்று தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த குழுவின் தலைவர்,வரவுசெலவுத் திட்டத்தில் சதவீத அடிப்படையில் சம்பளக் குறைப்பு காட்டப்பட்டாலும், எந்த அதிகாரியினதும் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது என்றும், நிச்சயமாக சம்பள உயர்வு மட்டுமே ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரச சார்பற்ற நிறுவனங்களால் நிதியளிக்கப்படும் திட்டங்களை, முறையான ஒழுங்குமுறையுடன் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் குழுவினர் கவனம் செலுத்தினர்.