சம்பியன்ஸ் கிண்ண நொக் அவுட் போட்டிகளுக்கு இருப்பு நாட்கள் அறிவிப்பு

Shanu
பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடைபெற்றுவரும் ஒன்பதாவது ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான லீக் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் அரை இறுதிப் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளன.இப் போட்டிகளுக்கு இருப்பு நாட்கள் (Reserve days) ஒதுக்கப்பட்டுள்ளன.
துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெறவுள்ள முதலாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் மோதவுள்ளன. இப் போட்டிக்கான இருப்பு நாள் மார்ச் 5ஆம் திகதி ஆகும்.
பாகிஸ்தானின் லாகூர் கடாபி விளையாட்டரங்கில் நாளை புதன்கிழமை (05) நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவும் நியூஸிலாந்தும் விளையாடவுள்ளன.இப் போட்டிக்கான இருப்பு நாள் மார்ச் 6ஆம் திகதி ஆகும்.இருப்பு நாட்களில் போட்டி நடத்தப்பட்டால் இறுதிப் போட்டி திருத்தி அமைக்கப்பட்ட மார்ச் 10ஆம் திகதி நடைபெறும்.
இந்த 3 நொக் அவுட் போட்டிகளும் மழையினால் பாதிக்கப்பட்டால் திட்டமிட்டபடி நடைபெறும் நாட்களிலும் இருப்பு நாட்களிலும் இரண்டு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும்.
இந்த 3 போட்டிகளிலும் முடிவு காணப்படுவதாக இருந்தால் ஒரு அணிக்கு குறைந்தபட்சம் 25 ஓவர்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பது அவசியமாகும். லீக் சுற்றில் குறைந்தபட்ச ஓவர்கள் அணிக்கு 20 ஓவர்களாக இருந்தது.
சம்பியன்ஸ் கிண்ண நொக் அவுட் போட்டிகளை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நாட்களில் நிறைவு செய்வதற்கு சகல முயற்சிகளும் எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
இதில் குறைந்தபட்ச ஓவர்களும் அடங்கும்.திட்டமிடப்பட்ட நாளில் மழையினால் போட்டி நிறுத்தப்பட்டால் இருப்பு நாளில் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்தே ஆட்டம் மீண்டும் தொடரும். புதிதாக போட்டி நடத்தப்படமாட்டாது.
ஒருவேளை, மழை காரணமாக இரண்டு அரை இறுதிப் போட்டிகளிலும் முடிவு கிட்டாமல் போனால் லீக் சுற்று நிறைவில் அந்தந்த குழுக்களில் முதலிடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.இறுதிப் போட்டி திட்டமிடப்பட்ட நாளிலும் இருப்பு நாளிலும் மழையால் கைவிடப்பட்டால், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இரண்டு அணிகளும் இணை சம்பியன்களாக பிரகடனப்படுத்தப்படும்.
போட்டிகள் சம நிலையில் முடிவடைந்தால் சுப்பர் ஓவரில் வெற்றி அணி தீர்மானிக்கப்படும்.